அத்திரி மகரிஷியின் பத்தினியாகிய அனுசூயையிடம் அவதாரம் செய்தவர். இவர் ஆதிசேஷனின் அம்சம். தாருகவனத்தில் சிவபிரானின் ஆனந்த தாண்டவத்தைத் தரிசித்தார் மகாவிஷ்ணு. அதனால் அவர் திருமேனி புளகாங்கிதம் அடைந்தது. புளகாங்கிதத்திற்கு காரணம் கேட்டார் ஆதிசேஷன்.ஆனந்த தாண்டவதரிசனம் காரணம் எனப் புகன்றார் மகாவிஷ்ணு.தானும் நடன தரிசனம் காண எண்ணித் தவம் புரிந்தார் ஆதிசேஷன்.அவரைச் சோதிக்கத் திருவுள்ளம் கொண்டார் சிவபிரான்.
பிரம்மதேவனின் வடிவம் கொண்டு ஆதிசேஷன் முன் தோன்றி என்ன வரம் வேண்டும் ? எனக் கேட்டார். அவரைப் பிரம்மதேவன் என எண்ணிய ஆதிசேஷன் உம்மால் ஆக வேண்டியது ஒன்றும் இல்லை எனக்கூறித் தவத்தில் கருத்தைச் செலுத்தினார்.மகிழ்வடைந்த சிவபிரான் பின் தரிசனம் தந்தார். ஆநந்த தாண்டவம் தரிசனம் செய்யும் பாக்கியத்தை வரமாகப் பெற்றார்.
 “அநுசூயையிடம் குழந்தையாய் வளர்ந்து சிதம்பரம் அடைவாயாக. அங்கே என் நடன தரிசனம் காண தவம் செய்து இருக்கும் வியாக்கிரபாத முனிவருடன் சேர்ந்து இருந்தால் அங்கே யாம் எம் நடன தரிசனம் தருகின்றோம்“ என்று இறைவன் அருள் செய்து மறைந்தனன்.
இவ்வரம் காரணமாக ஆதிசேஷன் ஒரு நாள் சிவத்யானத்துடன் கையேந்தி இருந்த அநுசூயையின் கைகளில் விழ,அம்மாதரசி பாம்பென்று கையை உதறிவிட அவன் பாதத்தில் விழுந்தான்.பாதத்தில் விழுந்ததாலும், அஞ்சலித்த கரங்களில் விழுந்ததாலும் பதஞ்சலி எனக் காரணப் பெயர் பெற்றார்.
பின் சிதம்பரம் அடைந்தார் பதஞ்சலி. வியாக்கிரபாதருடன் சேர்ந்தார். திருநடனம் கண்டு மகிழ்ந்தார். இன்றும் தில்லைத் திருத்தலத்தினுள் காணப்படுகின்றார்.
இவர் பாணினி சூத்திரத்திற்குப் பாஷ்யம் (விளக்கவுரை)எழுதினார். பதஞ்சலி யோக சூத்ரம் என்னும் நூல் இவர் பெயரால் விளங்குகின்றது.

0 comments:

பதஞ்சலி மகரிஷி

வீடியோ

அதிகம் படிக்கப்பட்டவை