பதஞ்சலி யோக சூத்திரத்தை 'ராஜ யோகம் ' என்றபெயரில் சுவாமி விவேகானந்தர் மேற்குலகுக்கு அறிமுகம் செய்தார். விவேகானந்தரின் அணுகுமுறை பெரிதும் வேதாந்தம் சார்ந்தது என்பதை காணலாம். அதன் பின் மேற்குலகுக்கு பொருந்தும்விதமாக யோகத்தை விளக்கும் பலவிதமான உரைகள் வந்துள்ளன. பிரம்மஞான சங்கம் சார்ந்த உரைகள் ஹடயோகத்தையும் பதஞ்சலி கூறும் யோகத்தையும் ஒன்றாக இணைக்க முயல்பவையாகும். பல்வேறு யோக மரபுகள் அதன் பிறகு உருவாகியுள்ளன என்று நாம் அறிவோம் . மகரிஷி மகேஷ் யோகியின் உலகப்புகழ் பெற்ற ஆழ்நிலை தியானம் , ரஜனீஷின் தாந்திரீக முறை தியான வழிகள் , இப்போது தமிழ் நாட்டில் பிரபலமாகியுள்ள வேதாத்ரி மகரிஷியின் தியானமுறை , ஜக்கி வாசுதேவ் அவர்களின் தியான முறை , ரவிசங்கர் சுவாமியின் சகஜ ஸ்திதி யோகமுறை முதலியவை போல இன்று குறைந்தது ஐம்பது யோகப் பயிற்சி முறைகளைக் காணமுடியும். இவற்றுக்கெல்லாமே பதஞ்சலியோக சூத்ரங்கள்தான் அடிப்படையாகும் .

இவற்றில் எது சரியானது ? அப்படி எதையும் ஒன்றுக்கொன்று ஒப்பிடமுடியாது என்பதை அவற்றை ஆராய்ந்தால் உணரலாம் . பதஞ்சலி சொல்வது சில அடிப்படை விதிமுறைகளையே. அவற்றை எப்படி செயலாக மாற்றுவது என்பதில் பல்வேறு போக்குகள் உள்ளன. மனிதர்கள் பலவகையானவர்கள். அறிவுத்திறன் , கற்பனை, வாழ்க்கை முறை, கலாச்சார பின்னணி ஆகியவற்றின் அடிப்படையில் மனிதர்களின் இயல்புகளில் திட்டவட்டமான மாறுதல்கள் ஏற்படுகின்றன. ஆகவே உலக மக்கள் அனைவருக்கும் ஒரே வழிமுறைகளை பரிந்துரை செய்ய முடியாது . யோகமே கூட அப்படி ஒற்றைப்படையானதாக என்றுமே இருந்தது இல்லை . அது ஒரேசமயம் பக்திமார்க்கத்துக்கும் தாந்திரீகத்துக்கும் எல்லாம் வழிமுறையாக இருந்துள்ளது என நாம் அறிவோம். ரஜ்னீஷின் தியான முறை ஒரு தர்க்கபூர்வமான விளக்கத்தை அனைத்துக்கும் அளிக்கமுற்படும்போது ஜக்கி வாசுதேவின் வழிமுறை செயல் முறை பயிற்சியையே முதன்மையாக கருதுகிறது.

பதஞ்சலி யோக சூத்திரங்கள் எல்லா தியான யோக முறைகளுக்கும் அடிப்படையானவை . இன்றைய நமது வாசிப்பில் நவீன உளவியல் அடிப்படைகளை அவற்றின் மீது போட்டு ஆராய வாய்ப்புகள் உள்ளன. நித்ய சைதன்ய யதி அவ்வாறு ஆராய்ந்து 'யோக பரிச்சயம் ' என்ற முக்கியமான நூலை ஆக்கியுள்ளார்.

நமது இந்த விளக்கமானது இரண்டு அடிப்படைகளில் யோகத்தை புரிந்துகொள்ள முயல்கிறது . நவீன உளவியல் மற்றும் நவீன இலக்கியம். காரணம் நம் மனத்தை நாம் அறிய இப்போது பிரபலமாக உள்ள இரு அறிதல்முறைகள் இவையே. மேலும் இந்நூல் முக்கியப்படுத்திப் பேசுவது எப்படி மனமற்ற நிலையை , கைவல்யத்தை அடைவது என்பதை அல்ல . நமது மனதை நாம் அறிந்துகொள்ள பதஞ்சலியை துணை கொள்வதே இந்நூலின் நோக்கம்.

ஒருநாளைக்கு பத்து தடவையாவது நாம் மனம் என்கிறோம். மனம் என்றால் என்ன ? நரம்பியல் மனம் என்பது மூளையின் செயல்பாடுகளின் ஒட்டு மொத்தம்தான் என்று சொல்கிறது . மூளை என்பது நமது நரம்புகளின் மைய முடிச்சாக நமது கழுத்துக்கு மேலே பரிணாமம் மூலம் உருவாகி வந்த ஒன்று .நரம்புகள் மூலம் வந்து சேரும் அறிதல்களை பதிவு செய்த் வைக்கும் இடம் .அப்பதிவுகளை ஒன்றுக்கொன்று தொடர்புபடுத்தி 'அறிவு ' ஆக மாற்றும் இடம். அறிவும் அவ்வறிவின் செயல்பாடுகளை ஒட்டி எழும் உணர்ச்சிகளும் அடங்கியதே நாம் மனம் என்று சொல்வது.அதாவது மூளைக்கும் நடக்கும் நியூரான்களின் இயக்கத்தையே மனம் என்கிறோம்.

நரம்பியலின் இக்கூற்றை உளவியல் முழுக்க ஏற்றுக் கொள்ளாது. அந்த நிர்ணயத்தினை அது 'நரம்பியல் குறைத்தல்வாதம் ' என்று நிராகரித்துவிடும்.மனம் என்பது முற்றிலும் மூளைக்குள் நடைபெறும் ஒரு நிகழ்வு அல்ல.அதற்கு மொழி , கலாச்சாரம், சமூக இயக்கம் ஆகியதளங்கள் சார்ந்து முற்றிலும் புறவயமான ஒரு பின்னணி உள்ளது. கோபம் என்பது ஒரு நரம்பியக்கம்தான் என நரம்பியல் விளக்கிவிடலாம் .ஆனால் அமெரிக்கனுக்கு கோபம் வருகிற விஷயத்துக்கு இந்தியனுக்கு கோபம் வருவதில்லை. அப்படியானால் கோபம் என்ற மன உணர்வின் ஊற்றுமூலம் எங்கே உள்ளது ? அம்மனிதனின் மூளைக்கும் அவன் வாழும் சமூகக்கலச்சார சூழலுக்கும் நடுவேயுள்ள ஒரு சந்திப்புப் புள்ளியில் உள்ளது எனலாமா ?

இலக்கியம் மனம் என்பதைப்பற்றி மிக விரிவாகவும் மிக சூட்சுமமாகவும் பேசிக் கொண்டிருக்கிறது .ஒரு இலக்கியப்படைப்பின் 'ஆழம் ' என்று நாம் சொல்வது பெரும்பாலும் மனிதமன ஆழத்தில் அது எந்த அளவுக்கு பயணம் செய்கிறது என்பதை பொறுத்தே அமைகிறது. இலக்கியம் வரலாற்றின் சிக்கல்கள் குறித்து பேசலாம். தத்துவ முடிச்சுகள் பற்றி அலசலாம். அரசியல் கருத்துக்களை ஆய்வு செய்யலாம்.ஆனால் அவையெல்லாமே இலக்கிய ஆக்கத்தில் படைப்பூக்கத்துடன் வெளிப்படுகையில் மனிதனின் ஆழ்மனம் சார்ந்த அறிதல்களாகவும் வெளிப்பாடுகளாகவும் மாறியிருப்பதைக் காணலாம்.

மனம் என்பது பலவிதமாக விளக்கப்படுகிறது , முழுமையாக ஒரு போதும் வகுக்கப்படுவதில்லை என்பதே உண்மை. ஏனெனில் மனிதமனம் என்பதை வகுக்க முயல்வதே மனிதமனம்தானே ? பிரபஞ்சத்தில் நாம் அறிவதெல்லாமே மனித மனத்தின் அலகுகளால் அறியப்படுவனவே. அவற்றில் எல்லாம் பொதுவாக மனித மனம் என்ற அலகு அடங்கியிருப்பதனால் அது மெளன இருப்பாக [Silent feature] உள்ளது அவ்வளவுதான் . சாம்ஸ்கி மொழியை அறிவதற்கும் ரோஜர் பென் ரோஸ் பிரபஞ்சத்தை அறிவதற்கும் மிஷேய்ல் ஃபூக்கோ சமூகத்தை ஆய்வதற்கும் பொதுவாக உள்ளது என்ன ? மனிதமனம் உண்மையை அறிய முற்படும் முறை , மனிதமனத்தின் செயல்முறை அல்லவா ?

மானுடப் பொதுமை [Universal] என்ற ஒன்றை நாம் சொல்லும்போது உண்மையில் பொதுமனம் [Universal mind] என்ற ஒன்றை கற்பனை செய்தே அதைச் சொல்கிறோம். அப்படி ஒன்று உண்மையில் உண்டா ? சந்தர்ப்பம் சார்ந்தும் , சூழல் சார்ந்தும் , விஷயம் சார்ந்தும்தான் அப்படி ஒன்றை உருவகம் செய்துகொள்ளமுடிகிறது. ஆகவேதான் தத்துவ வாதிகளில் ஒருசாரார் புறவயம் [Objectivity] என்பதையே நிராகரிப்பவர்களாக உள்ளனர் .

அகம் அல்லது மனம் என்பதை அறிவது என்பது எல்லா அறிவுச் செயல்பாடுகளுக்கும் அடிப்படையாக உள்ள விஷயமாகும். நீங்கள் என்ற அறிவுத்துறையை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள். மொழியியல் ,சமூகவியல் , உயிரியல் , கணிதம் -- எதுவானாலும் அது மனம் என்பதற்கு ஒரு விளக்கம் அளிக்க முற்படுவதனைக் காணலாம். காரணம் மனம் என்பதை வகுத்த பிறகே அது தன் பிற அலகுகளை வகுக்க முடியும். மேலும் அது தன் அறிதல்களை வகுக்க வகுக்க அவற்றை அறிகிற மனமும் வகுக்கப்பட்டபடியே போகிறது. உதாரணமாக மொழியியல் மொழி என்றால் என்ன என்று வகுத்து மொழியின் பல்வேறு செயல்பாடுகளை வகுக்கும்போது வகுக்கப்படுவது மொழிமூலம் செயல்படும் மனமும்தான் இல்லையா ?

ஆகவே மனம் பற்றிய ஒரு சுயப் புரிதல் என்பது எந்த ஒரு சிந்திக்கும் மனிதனுக்கும் அவசியமானதாகும். நான் எதை அறிகிறேன் என்பது நான் எப்படி அறிகிறேன் என்பதுடன் சம்பந்தப்பட்டுள்ளது ,அதன் மூலமே தீர்மானிக்கப்படுகிறது . அதற்கு மிக எளிய வழி தன் மனதை கூர்ந்து கவனிப்பதே .கவனிக்க ஆரம்பித்து விட்டார்கள் என்றால் தியானம் செய்ய ஆரம்பித்து விட்டார்கள் என்றே பொருள் . அப்படியானால் அந்த தியானத்தைமேலும் துல்லியமாக, மேலும் ஆழமாக, செய்வது எப்படி என்று அறிவது அவசியம் . பதஞ்சலி யோக சூத்திரம் அதற்குரிய ஒரு வழிமுறையாகும். நமது இந்நூலில் மனதை அறிய அந்நூலை எப்படித் துணை கொள்வது என்பது மட்டுமே பேசப்பட்டுள்ளது

எப்படி யோகத்தை பயன்படுத்துவது ?

மனதை அறிய என்ன செய்ய வேண்டும் .வேறு ஒன்றும் செய்யாமல் ஒரு இடத்தில் அமைதியாக அமர்ந்திருங்கள். என்ன நடக்கிறது ? அதிகபட்சம் நம்மால் மூன்று நிமிடம் கூட அப்படி அமர்ந்திருக்க முடிவதில்லை .கணிப்பொறியில் நாலாபுறமும் தரவுகள் உள்ளெ வந்துகொட்டும்போது ஓயாது ஓடும் வன்தகடு [Hard disk] போல உள்ளது நம் மனம். நித்ய சைதன்ய யதி தன் 'யோக பரிச்சயம் ' நூலின் முன்னுரையில் மிக அதிகமாக நம்மை பாதிப்பது நமது சருமமே என்று சொல்கிறார் . கொஞ்ச நேரம் உட்கார்ந்திருந்தாலே கூட நாம்மூகை காதை காலை சொறிகிறோம். பல இடங்களை தடவிக் கொள்கிறோம்.சசைந்து அமர்வோம். குளிர்கிறது என்றோ புழுங்குகிறது என்றோ எண்ணிக் கொள்வோம். ஒரு கணம் கூட நம்மால் நம் சருமத்தை மறக்க முடியாது.காரணம் பிரபஞ்சத்தில் உள்ள பொருள்விரிவுடன் நேரடியாக தொடர்பு கொண்டுள்ளது நமது சருமமே.

நித்யா சொல்கிறார், நமது மூளை சருமத்தின் நீட்சிதானே என்று. நமது உடலை பிரபஞ்சத்தில் இருந்து பிரிக்கும் எல்லை அதுதான். ஆகவே நமக்கும்பிரபஞ்சத்துக்கும் இடையேயான முக்கியமான தொடர்பு ஊடகமும் அதுதான்.அதன் பிறகு காதுகள் .அதன் பிறகு நாசி. கண்களைமூடிக் கொள்ளலாம். நாக்கு சற்று கட்டுப்பாட்டில் உள்ளது. இவை நமக்கு அறிதல்களை அள்ளி அளித்தபடியே உள்ளன . அவ்வறிதல்கள் எல்லாமே சார்பு நிலை உள்ளவை .ருசி என்கிறோம். குளிர் என்கிறோம். இசை என்கிறோம். இவ்வறிதல்கள் எல்லாமே அதற்கு முன்புள்ள அறிதல்களுடன் ஒப்பிட்டும் , அறிதல்களை ஒன்றுடன் ஒன்று ஒப்பிட்டும் அறியப்படுபவையே. புலனறிதல்களை தொகுத்து நாம் உருவாக்கும் உண்மைகள் அனைத்துமே ஒப்பிட்டு உருவாக்கப்படுபவை ,சார்புநிலையானவை.

புலன்கள் வழியாக உள்ளே வரும் அறிதல்களை உள்ளே ஏற்கனவே உள்ள அறிதல்களின் பெருங்குவியலில் எங்கே வைப்பது என நம் வன்தகடு தன் தொகுப்புமுறையை கணம்தோறும் மாற்றியபடி சுழன்றபடியே உள்ளது . நாம் அதை மனதின் 'அர்த்தமற்ற ' சுழற்சி என்கிறோம். ஆனால் நாம் இங்கே அர்த்தம் என்று சொல்வது அந்த அறிதல்களை நாம் பிறகு நம் தேவைக்கு ஏற்ப மீட்டு எடுக்கும்போது ஏற்படும் அர்த்தத்தையே. அதாவது அந்த தேவையினால் உருவாகும் அர்த்தத்தை.ஆனால் அவ்வறிதல்கள் உள்ளே போய் இடம் பிடிக்கும்போது அப்படிப்பட்ட தேவைகள் ஏதுமில்லை .அது தன்னிச்சையாக நடக்கிறது

' 'நாய் ஊளை போடுகிறது.நாயெல்லாம் பசித்திருந்தால்தான் ஊளைபோடும்.எனக்கு பசிக்கிறது. இந்தமாதம் முழுக்க டயட்டில் இருக்க வேண்டும். குப்புசாமி நல்ல குண்டு. என் மனைவி அத்தனை குண்டு அல்ல. குண்டுப்பெண்கள் செக்ஸுக்கு உதவமாட்டார்கள் என்று ஹெமிங்வேயின் ஒரு கதாபாத்திரம் சொல்கிறது.பாவம் ஹெமிங்வெ சுட்டுக் கொண்டு செத்தான். கிழவனும் கடலும் . ஒரு ஓட்டப்பந்தய வீரன் போரில் முதல் குண்டுச்சத்தம் கேட்டதுமே ஓட ஆரம்பித்துவிட்டான். நேரமாகிறது பசிக்கிறது.நாயின் ஊளை.... ' இப்படி போகிறது நமது மனம் இல்லையா ?

இது வெறும் அர்த்தமற்ற இயக்கமா ? இல்லை இங்கே உள்ளே வரும் செய்திகள் அடுக்கப் படுகின்றன. ஆனால் நாம் 'சிந்திக்கும்போது ' இருக்கக் கூடிய அடுக்குமுறை இங்கே இல்லை . ' 'நாய் ஊளை போடுகிறது.ஊளைபோடும் நாய் அனேகமாக பசித்திருக்கும். பசித்த நாய் கடிக்கும். ... ' நமது 'சிந்தனை ' இப்படிப் போகும் . இங்கே இணைக்கும் புள்ளியாக உள்ளது என்ன ? நாய் பற்றிய எச்சரிக்கை . அப்படி ஒரு மையம் இல்லாமையினால் நமது மன ஓட்டங்களில் சீரான ஒழுங்கு இல்லை. ஒரு எண்ணத்தின் விளிம்பிலிருந்து அடுத்த எண்ணம் பிறக்கிறது . ஓர் எண்ணத்தின் ஒலியிலிருந்து கூட அடுத்த எண்ணம் பிறக்கலாம் .சிலசமயம் அந்த தொடர்பு நமது விழிப்புமனத்துக்கு தெரியாத ஒன்றாகக் கூட இருக்கலாம்.

மனதை அறிய நாம் உட்காரும்போது புலன்வழி அறிதல்கள் , அப்புலனறிதல்களின் இயல்பான அடுக்குமுறை அதாவது 'எண்ணங்கள் ' , அவ்வறிவை நாம் மீட்டெடுக்கும் போது ஒரு நோக்கத்துடன் அடுக்கப்படும் முறை அதாவது 'சிந்தனை ' ஆகியவை கலந்து கலந்து நிகழ்கின்றன. இதையே நாம் மன இயக்கமாக அறிகிறோம். இதை நாம் அறிந்துவிடமுடியுமா ? தொலைக் காட்சியில் ஏழெட்டு சானல்களை ஒரேசமயம் போட்டு பார்க்க முடியுமா ? ஆக அதை தனித்தனியாக அறிய யோகம் சில வழிமுறைகளை பயன்படுத்துகிறது. புலன்களில் இயக்கத்தை சற்றுநேரம் நிறுத்திவிட முடியுமென வைத்துக் கொள்வோம் . சிந்தனையை அதன் பிறகு நிறுத்திவிடமுடியும். பிறகு அகமனம் தனக்குள் இருப்பவற்றை மட்டும் மாற்றி மாற்றி அடுக்கிச் செயல்படுவதைக் காணலாம்.அதன் இயங்குமுறையை அறிவதென்பது நம் மனதை அறிவதற்குச் சமமே .

ஆக பதஞ்சலி யோக சூத்திரங்களை நமது மனதை அறிவதற்கான முற்றிலும் புறவயமான வழிகாட்டியாகக் கொள்ளலாம். அவ்வறிதல் அறிவார்ந்த செயல்பாடுகளில் ஈடுபடும் அனைவருக்கும் இன்றியமையாத ஒன்றாகும்.


பதஞ்சலி முனிவரும் யோக சூத்திரங்களும்


பதஞ்சலி முனிவர் கி.மு. நாலாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என்பது பொதுவான ஊகம். கி மு இரண்டாம் நூற்றாண்டில் என்று சொல்பவர்களும் உண்டு. யோக சூத்திரங்கள் 1]சமாதி , 2]சாதனை, 3]விபூதி, 4]கைவல்யம் என்று நான்கு பாதங்களிலாக 195 சூத்திரங்கள் கொண்டது.

யோக சூத்திரங்களின் முக்கியத்துவம் என்னவென்றால் பலகாலமாகவே ஒரு வழிமுறையாக கடைப்பிடிக்கப்பட்ட யோக முறைகளை வகுத்து தொகுத்து அளித்தமைதான் . அதைவிட முக்கியமானது ஒன்று உண்டு. யோக முறைகள் அவருக்கு முன்பாக ஏறத்தாழ எல்லா கருத்தியல்தரப்புகளாலும் பலவிதமாக கடைப்பிடிக்கப்பட்டன. பதஞ்சலியே அவற்றைத் தொகுத்து பொதுவான அம்சங்களை மட்டும் கொண்டு யோகம் என்ற தனித்த அமைப்பை உருவாக்கினார் . அம்மரபு எந்த மதத்துக்கும் சொந்தமில்லாமல் ,அதே சமயம் அனைத்து மதத்துக்கும் பொதுவானதாக இருக்கும்படி அமைத்தது அவரது சாதனையே .ஒற்றை வரியில் சொல்லப்போனால் 'மதசார்பற்ற புறவயமான நிர்ணயங்களாக ' யோக சூத்திரங்களை அமைத்ததே பதஞ்சலி முனிவரின் பங்களிப்பாகும்.

பதஞ்சலி யோகத்துக்கு பல உரைகள் பண்டைக்காலம் முதல் உள்ளன. வியாச பாஷ்யமே முதல் உரை. அதுவே அடிப்படையானதுமாகும். இவ்வுரை சாங்கிய பிரவசன பாஷ்யம் எனப்படுகிறது. சாங்கிய சிந்தனையின் நீட்சியாக வியாசன் யோகத்தைக் காண்கிறார் . வாசஸ்பதி மிஸ்ரரின் 'விசாராதி ' என்ற உரையும் புகழ் பெற்றது .

1 comment:

பதஞ்சலி மகரிஷி

வீடியோ

அதிகம் படிக்கப்பட்டவை